
உஸ்ஸ்ஸ்ஸ்...................ஸ்ஸ்
சத்தமிடாதீர்.........!
உங்கள் காலடியில் நசுங்கும்
சருகுகளின் சரசரப்பும் கூட
உறங்கிக்கொண்டிருக்கும்
மைந்தர்களின், எம் மாவீரர்களின்
கனவுத்தூக்கத்தை
கலைத்துவிடக்கூடும்,
ஆதலில் உங்கள்
பாதங்களைக் கூட
பவித்திரமாகப்பதித்து அவர்
பாத மண்ணிலேயே செலுத்துங்கள்
மலர்களையும், மாலைகளையும்,
உங்கள் கண்ணீர் மணிகளின்
ஒலிகளும் கூட
கலைத்துவிடலாம் அதலால்
அமைதியாகவே அதையும் செலுத்துங்கள்.
நீண்ட உழைப்பின்
நிம்மதியான தூக்கம்,
தூங்கட்டும் அவர்கள்.
விடியும் ஓசையும் அவர்க்கே
முதல்நாதமாய் ஒலிக்கும்.
அப்போது அவர்
தியாகத் தூக்கங்களின்
நிறைவு விழா நடக்கும்
நிச்சயமாய் ஒருநாள்,
அதுவரை
உஸ்ஸ்ஸ்...............ஸ்ஸ் சத்தம்போடாதீர்.