My Blog List

Sunday, February 6, 2011

தியாகச்சுடர்கள்

நீங்குமா நினைவு நின்று
நீங்கள் தின்ற சுடர்த்தீயின்
தாகம் தணிந்த பின்னும்
நீங்காது நீளும் உங்கள் நினைவாலே
எம்மாலயம் மனவாலயம் நிகர்க்கடவுளராய்

எம் தமிழோடு தமின தேசமும் எரியக்கண்டு
உம்தேகம் தீய்த்து தீர்வெழுத முயன்ற
தியாகச் செம்மல்களே!

அடிகொண்ட தமிழ் தேசம் சிதைவுண்ட சேதிகண்டு
சிதை கொண்டாயோ முத்துக்குமரா!
முத்தளிக்கும் உன் மூச்சை எம்
மிச்சத் தமிழினம் வாழ துச்சமாய் துறந்து
உச்சியில் அடித்தாயோ தமிழ் நாட்டின்
உணர்வுச்சியில் அடித்தாயோ,

அறிக்கைவிட்டு அழுதுடைக்கும் வெளிவேச
செய்தி கொண்டு பார்த்து உடன்
ரசித்து மென்ற பெருந் தலைகட்கு
உன்னதமென்றோ உன் செயல்
உணர்வுகளைப் பிடுங்கும் தீரமல்லோ

ஈழத்தமிழ் வாழ்வு துடிக்க உன்
சிந்தையில் எந்தையர்கள் உந்தையர்களாக
மிளிரட்டும் வாழ்வென
சிதை கொண்டாயோ முத்துக்குமரா
முப்புரத்தீயை மேனியில் ஏற்றி
உலக நீதி கேட்டாயே!
எம் தமிழர் உயிர் வாழ
நியாயங்கள் வேண்டுமென்று
நீத்தாயோ உயிர்த்தீயை தீய்த்து.

அடங்காத்தமிழரை அடக்கி ஒழிக்க நினைத்த
சிங்கள ஆதிக்கமே வெறும்
சிதைகள் அல்ல இவைகள்
ஓடி ஓடி நீ எங்கே
ஒழியப் போகிறாய்!
எம்மவர்க்காய் பதினொன்பவரும்
மேனியில் ஏந்திய தீ உன்
தீட்டெரிக்கும் விரைவரையும்
விரைந்தெழுந்து கொண்டிருக்கும்
தியாகங்கள் முன்னால் - எம்
தாயகம் ஒளிரும்

சிங்கள ஏகாதிபத்தியத்தின்
ஏப்பங்கள் தின்று தீர்த்த எம்
தேசங்கள் சாவிலே
படைபிடித்த போரிலே
நிலம் இழந்தோம் நிற்கதியானோம்
புலங்கள் தாண்டி
புதிய தலங்கள் ஏதுமின்றி
ஏதிலியாய் நடக்கையிலே
சேதி தேடி உம் செவிப்பறை எரித்ததோ
ஐயா அப்துல் ராவூப்தரே
தமிழ் நாட்டில் எம் துயர் எரிக்க
உயிர் எரித்தாயோ
முதல்மகனே உயர்மகனே

கள்வனாய் வந்திறங்கி
பிறமுதுகாடி எம்மண்ணை
உறவாடி ஊரழித்து தமிழழித்து
அவர்தம் உயிர் குடித்த
ரத்தக் காட்டேறிகளாய்
ஊழிப் பேய்களாய் - ஊர்
பிணம் தின்னும் சிங்களமே உன்
பிண நாற்றமறுக்கவோ எம்
குருதி குடித்து குடித்து
குதித்துக் கழிக்கிறாய்

யாரிடத்தை யார் தொடுவது
வந்தேறு குடிகளாய்
வந்தேறிய கூட்டம் நம்
தாயகத்தைத் தரமறுப்பதோ!
யார் கொடுத்ததிதை காடையர்க்கென
தீக்குழித்தாயோ வளவா
சென்னையின் எழில் வளவா
வாழாமல் போனாய் தீயாய் உன்
தியாகத்தை நிரூபித்தாய்
சுடராக ஒளிர்கிறாய் நிச்சயமாய்
சுதந்திர ஒளிர்வின் ஒளியில்
சுடரப்போவது உன் ஒளியோடே

சிவகாசியின் மாரிமுத்து ஐயனே
சிவந்து கிடந்த எம் மண்ணின்
குரதியீரம் மறைக்கவோ நீ மறைந்தாய்
தீயுள் உன் மேனிகொண்டு

வடுக்கள் கண்டு வதைந்து துவண்டு
தாங்கிய தமிழரில்
ஈழத்தமிழரின் துயரில்
அடுக்காதோ நீயும்
தீவைத் தெரிந்தாய் தியாகியே
புதுக்கோட்டையின் பால சுந்தரனே
எம்மக்கள் கண்ணீர்
காணாதோடிடும் என நினைத்தாயோ நீ
இன்னும் காணவில்லையே
நம்முறவுகளை சொந்தங்களை
வழி நெடுக வீசியெறிந்த பிணங்களை
கணங்கள் தாண்டி பிணமாகியே நடையோடு
பீடை கொண்டோமே இன்னும்
பிறிதொரு மலர்வு தோன்றவில்லையே?

குலைக் குண்டுகள் கொண்டு
நிலைகொண்ட தமிழ் தேசங்கள்
நிலமோடெரிந்த நிலை பொறுக்காது
சிதையேகி நின்றீரோ – எம்
சிதையோடு சிறை கொண்ட வாழ்வை
உலகிற்கு உரையேற்ற நினைத்தீரோ
விடுதலை விளிம்புகள்
தொட்டநிலை வேரோடறுத்தனரே
உலக வல்லரசு வல்லூறுகளோடு
வலை போட்டு நம் தமிழரை
ஈனமாய்க் கொன்றதை
உணர்வலை வீசிநீ
ஜெனிவாவில் உணர்த்தவோ
உடலெரிந்து சாம்பலானாய்
அவலங்களின் குரல்கள் உன் காதில்
அதிரவதிரத் தின்றாயோ தீயை
வீரனே!! உன் தீரம்
தீயாய்க் காட்டத்தான்
சென்றாயோ முருகதாசா
முயன்று எழுந்தாயோ எம் துயரம் சொல்ல
உன் தியாகம் எம் நெஞ்சில் தீயடா
தீராத எம் தாயக தாகத்தில் நீ திரியற்ற தீபமே
சாகவில்லை உன் நினைவுகள்
சயனப்பட்டுப் போகாது நம் தமிழினம்

ஆர்ப்பரித்த ஓரினத்தை
அழிக்க நினைத்தீரோ
வரலாறு கொண்ட
வாழ்வாங்கு வாழ்ந்த தமிழனத்தை
தமிழ் மண்ணில் பிரித்தீர் அழித்தீர்
தீயிட்டுக் கொழுத்தி
சாம்பலையும் கரைத்தீர்
கரைந்தது நீரிலல்ல
தமிழர் கண் கொண்ட நீரிலே

நிறுத்து நிறுத்தென
நித்தம் போராடிய குரல்களின்
குரல்வளைகள் பிடிங்கிப் போட்டு
விழிபிடுங்கி வீசிய வீணங்களின்
ஆதிக்க அராஜகம்
அடக்க நினைத்தனரோ
இவர்கள் தம்முணர்வு கூறி நம்
துயரங்கள் தாங்காது
தேசங்கள் கடந்த தேசங்களில்
அக்கனியால் ஆணையிட்டனரோ

ஐயா எம் தியாகச் சுடர்களே
ஒலிக்கிறதையா உம் மன
ஓலங்கள் இதயங்களில் எம்
அவலங்கள் அடக்கவன்றோ
ஓவியமானீர்கள் தீயெழுதி நீர்
வரைந்த தீக்கோடுகள் நம்
தமிழீழத்தை வெளிச்சத்தில் காட்டுமைய்யா

எம் நாடு எரிந்த தீயை நீ ஏந்தினாயோ
அயலூரின் ராசசேகரனனே
மாண்ட மொழி கேட்டதோ
மலேசியாவில் ஸ்ரீபன் ஜெகதீசனே
ஐயா ராசாவே
பாய்ந்து வீழ்ந்த குண்டுகளில்
நீத்த உயிர்கள் அலறியதோ
பள்ளப்பட்டியில் ரவி ஐயனே
சீர்காழியில் சிதை தின்ற ரவிச்சந்திரனே
எம் சோகம் உம் சிந்தையில் எரிந்ததோ
தீ அமரமேகினீரோ அமரேசா
தீய்த்துக் கொண்டிருந்த தமிழீழத்திற்காய்

தமிழ் வேந்தரே சென்னை சிவப்பிரகாசமே
உமக்கு சிவந்தமண்ணின் சோகம்
அக்கினியில் அருளியதோ
சீனிவாசா, கோகுலரத்தினா
சுப்பிரமணியே சிவானந்தனே
நீவீர் எல்லாம் தீயின் மைந்தர்களோ
அனலிடை அழித்தீரோ ஆகுதியை
வேகும் எம் உயிர் நிலைகள் உலகேகும் என்று
வந்தனரைய்யா பெருந்தலைகள்
பிணங்கள் பாத்தனரய்யா
காணொளியிலும் கண்டனர்
பரிதாபம் கொண்டனர்
அறிக்கைகளும் தந்தனர்

ஒரு சுந்தர பூமி
சுடுகாடாயிருக்க ஆங்கே
சாம்பல்களில் தமிழர் பேரெழுதியிருக்க
கூடுகளும் குவிந்திருக்க
குதிக்கிறது ஊழிப்பேய்கள்
இடையிடை உம் தியாகம் எம்
இருளதை மறைக்க
இன்னும் நடைப்பிணமாய் நடையேகிறோம்
எம் தாயகம்,
தமிழர் பூமியாகும் ஓர் நாளில்
அங்கு நீவீர்
தீச்சுடராய் நிச்சயம் ஒளிர்வீர் .