My Blog List

ஏன் பாடினாய்...........?


என் அபிமான பாரதிக்கு
மீண்டுமொரு மடலோடு
மதிப்புக்குரிய வணக்கங்கள்... 
 
உன்னோடு
உன் அவையும் கவியும்
நலமுற்றிருக்கிறது...


பயம் வேண்டாம் பாரதி
காதலுக்கு தூதனுப்பும்
கடிதமிதென எண்ணி.


உன்னைத்திட்டி யிங்கே
உன்னிடம் சண்டை போட்டு
உண்மைபெற வேண்டும் நான்.
 
உன் ரசிகர்களும்
உன் அபிமானிகளும்
எனை வெறுக்கலாம்...


என்ன நிகழ்ந்தாலும்
நீதி கிடைக்காமல்
நின்னை விடேன்.


அன்பைப் பாடினாய்
அடிமையைச் சாடினாய்...
அறைகூவிக் கவிபாடி..


காதலை இங்கு
காக்காய் வரைக்கும் கூறிய நீ
மேக்காய் கூடப் பேசவில்லையே ...


இரத்தம்
கண்ணீராய் வடிந்த... வடிகிற..
எம்மண்ணை..


பாடியும் பாடினாய் நீ
ஈழமதை எம் தமிழ்
ஈழமதை....


எதற்காய்
சிங்களத் தீ வென்றாய்
சிந்தை கெட்டு நீ..


வந்தேறு குடியாய் பின்
"வாழ்ந்த எம் தமிழை"
வீழ்த்த நினைத்தவரின்


பெயர்கொண்டு
உரிய எம்தேசத்தை
எதற்காய்


"சிங்களத் தீவினிற்கோர்
பாலமமைப்போம்" என
பாடிப் போந்தாய்...


வன்னியன் பண்டார வன்னியன்
விண்ணையளந்து
வீரம் சொல்லிச் சென்ற மண்ணை...


சங்கிலியச் சக்கரவர்த்தி
சரித்திரம் செய்த
சித்திரத் தீவை...


எல்லாளன் காத்து
வாழ்ந்த தமிழையும்..
தமிழ் மண்ணையும்...


எப்படி நீ புகழலாம்
சிங்களத் தீவென
சிறப்போ விதுவுனக்கு...


எம் மண்ணை
தமிழ் அண்ணல்கள்
ஆண்ட மண்ணை...


நீ புகழ்பாடாமல்
போயிருந்தாலும்
போற்றியிருப்பேனுனை


உன்மேல்
காதல் கொண்ட நெஞ்சால்
கவியுள்ளுறைந்த மனதால்...


ஊறு சொல்லவைத்தாயே
துன்பம் நெஞ்சடைத்த போதும்
காசு சொல்ல வைத்தாயே..


தமிழ் கொழித்த தேசத்தை நம்
ஈழத்தை.. ஏன் படித்தாய்
"சிங்களத் தீ"வென நீ....... 


    ******




அழகு


"ங்ஙா....ஆ.. ங்ஙா.....
ங்ஙா.......ஆ...........
ம்ம்ஊ...ம்ஊ........".

பாலா திரும்பிப் பார்த்தான்
வலப்பக்கக் கிளையில்
காக்காய்.

"என்ன காக்கையாரே
எதற்காய் மூக்கைச் சிந்தி
பாட்டாய் கத்துகிறீர்

பாட்டியிடம் நீர் சுட்ட வடையை உம்
பழைய எதிரி பறிச்சிட்டானோ?
நடந்தசேதி கூறும்".

****

"போம் பாலா
பொழுதுகள் போகவில்லையோ உமக்கு
கிண்டலடிக்கிறீர் என்னை".

****

எங்கே காக்கையாரே
பொழுதுகள் போகிறது
காலையும் மாலையும் கவலைதான்.

மாறி மாறி நம்
மறத்தமிழினம்
மடிந்தல்லோ போகிறது.

இப்படியிருக்க எப்படி
நிம்மதியாய் பொழுதைப்போக்குவது?
திரிசங்கு சொர்க்கம் தான்.

****

"யாரைத் திட்டுகிறீர்
புரியுமாறு கூறும் பாலா
புதிர் போடாதீர், காக்காய்க்கு புரியாது".

****

அழகான காக்கையாரே உம்
அழுகைக் கதைதான் என்ன..?
அதைக்கூறும் முதலில்.

****

எம் கதை
பெரும் கதை என
பெருமூச்செறிந்தது காக்காய்

நம்மை யாரும் கணக்கெடுப்பதில்லை
கருமை கொண்டவை என
வெறுப்பாய் விரட்டுகிறாரே.

மயில் குயிலென
மதிப்பததைப் போல்
மனதிலெமைக் கொள்வதில்லையே?

இதற்குப் பொருத்தமாய் என்
இறக்கையைப் பாரும்
செம்மண் வரிகளாய்.........!

தரித்திரம் பிடித்த
காக்காய் கரையுது என
காந்துவாரே உம் மானிடர் எமை.!

காகா கறுப்பு... அண்டங்காக்காய்...
கேலி செய்து இப்படியெல்லாம்
கேவலப்படுத்துவாரே நம்மினத்தை.

****

முட்டாள் காக்கையாரே
குயில் கூடக் கறுப்புத்தான்
குளறுகிறீரே அர்த்தமற்று.

****

சமாதானமாய் சமாளிக்காதீர்
குயிலின் இனிய குரல்
குறை மறைத்து மானிடரை மயக்குகிறதே.....?

****

"யார் சொன்னார்..
பைத்தியக் காக்கையே
தெரியுமா உமக்கு?

குயில் தன்னினிய குரலால்
இசைக்கும் போது
மனிதர் மயங்குவது மறுப்பதற்கில்லை தான்

ஆனால் குயிலிசைப்பது
மானிடரை மயக்கவல்ல,
மயக்கித்தன் இணையை அழைக்கவே!

காம மிகுதியினால் தன்
காதலரை அழைக்கவே
கூவுகிறது இனிதாய்.

காதலில் துன்புற்று, இன்புற
காதலைப் பறைசாற்றி இனிதிசைப்பது, தன்
காம இச்சையைத் தீர்க்க எண்ணியே!

நீர் கறுப்பானால் என்ன?
உம் மனம் மாசற்ற
வெண்மையல்லோ.

கறுப்பினாலே தான்
நிறங்கட்கு அழகு, இல்லையேல்
கருத்தேதுமிராது.

****

காக்காய் மீண்டும்
கண்ணீருடன் கூறிற்று,
பாலாவிடம் இப்படி.

இழவு விழுத்தவோ கரையுது,
இந்தக் காக்காய் கல்லடித்து
தூர விரட்டு, என்றல்லே ஏசுவர்.

****

நன்றி மறந்தீரோ
நல்ல காக்காய்
நீர்!

மானிடர் உம்மை
மகிமைப் படுத்துவதை
மறுத்துப்பேசாதே நாக் கூசாது.

இறந்த சொந்தத்தின் தூதாய்
உனையல்லோ நினைத்து
உணவு படைக்கிறார்!

சனி நோன்பு முடிக்க
உன் வரவல்லோ
உன்னதம் என்கிறார்!

எதிர்வு கூறலின்
எதிரெலி நீயென
விருந்து வரக்காண்கிறாரே!

விந்தையான காக்காயே
சிந்தையில் வைத்திதை
நிந்தை செய்யாதே மானிடரை.

ஒற்றுமையின் சின்னமாய்
உம்மினத்தைத் தானே
உதாரணம் கூறுகிறார்.

புரிகிறதோ இப்போது
புரட்டளக்கும் காக்கையே
கூடி வாழும் குலம் நீரென.

****

நன்றி பாலா,
நல்ல புத்தி சொன்னீர்.
நான் போய் உம்

நண்பர்கள் நிலைகண்டு
நலம் கேட்டு வருகிறேன், நீ
நலமாயிரு.

இயம்பிய காக்காய்
இலங்கை நோக்கி
பறந்து சென்றது.

**************





 உலர்ந்துபோன உணர்வுகளுடன்

வெயிலில் உலர்ந்து 
பனியோடு உறைந்துபோயிருக்கும் 
இதயங்களிவை,

பகட்டாய் வாழ நினைப்பவர், 

பண்பாட்டை மறந்தவர் 
இவை மற்றவர் நினைப்பது நமைப்பற்றி.
 

ஆனால்
இங்குபடும் துன்பம்
இதை யாரறிவார் ?
 

பாசத்திற்காய் ஏங்கி 
பரிதவிக்கிறது உள்ளம். 
பாசம் முகவேசங்களாய் ..........!!


அம்மா உறவுகள், 

அக்கா, தங்கையென 
அருகிருக்க ஆசைகள் நெஞ்சில்.
 

செந்த மண்ணில் 
சொந்த வீட்டில்வாழ்ந்து, 
செந்த மண்ணிலே சாகவேணும்.
 

எங்கே விட்டது நம் 
தலைவிதிகள், தமிழருக்கு 
ஓடுவதல்லோ விதி.

ஊர் விட்டு நாம்

காடு தாண்டி.......... 
கடல் தாண்டி.........என்றெல்லாம்.
 

யுத்த பூமியாய்ப்போன 
நாட்டில் அகதியாய் வாழக்கூட 
அனுமதிக்கவில்லை.


******


மண்ணிலே நம் மண்ணிலே 

மானமுள்ள மனிதராய் 
மடிந்திருப்போம். ஆனால்,  

வரிசையாய் நீண்டிருந்த 
உறவுகளின் நிலைகள் 
உணர்வுக்குள் உலைமூட்டின.


தம்பி தங்கையோடு இரண்டக்கா,

வயேதிபப்பெற்றோரோடு, 
வறுமையும் துரத்திக்கொண்டிருந்தது.
 

விளை நிலம் இழந்து 
வயிறு நெருப்பாய்வேக, 
கடன் சுமைதோளில் கக்கும்.


******


வெளிநாடு..........வெளிநாடு ! 

கனடா வந்தால் 
கனக்க மதிப்பாமே
 

இங்குபடும் துன்பங்கள் 
உயிர் வெறுக்கும் கெடுமைகள்........... 
ஆறா வடுவாகும் வேதனைகள்...........
 

இங்கே 
எம்முடைய அந்தஸ்து.........? 
அழமட்டும் தான் முடியும்.


கனடா போனநீ 

ஆறுமாதம் போட்டுத்தானே ? 
அஞ்சு லட்சம் அனுப்பன்மோன.
 

ஊரிலிருந்து கலோ சென்னவுடன் 
காசு கெதியாய் 
போகவேணும்.
 

இல்லையெண்டால் 
ஒரே ரகளை, 
ஒத்தூதும் உறவுகள்.


அங்க இங்க மறைஞ்சு 

வீசாஇன்றி இரவுபகல் செய்தாலும் 
ஆயிரங்கள் ஒன்றும் அதிகமாகாது.
 

இப்படியே 
ஓடி ஒளிச்சு 
இரண்டு வரிசம் உழைக்க........
 

பெரியக்கா கலியாணம்
அரசாங்க மாப்பிளையாம், 

பதினைஞ்சு லச்சம் சீதணமாம்.
 

சந்தோசம் தான் எனக்கும்
முப்பத்தி ரெண்டில் தான் முடிக்கிறா 
மாப்பிள்ளையை வாங்கி.
 

வரிசையாய் 
சின்னக்காவும் முடிக்க 
இருபது லச்சம் வேணுமாம்.
 

வந்த கடன், 
வீட்டுக்கடன் எண்டுழைக்க
பறந்திட்டு பத்துவருசம். 

வீசாவும் கிடைச்சு 
வெளிநாட்டான் ஆகீற்றன்
உணர்வு மட்டும் உயிர்க்கவில்லை.
 

தனிமை எனைச்சுட்டது 
தறிகொட்டு வாழ நான் 
தரமற்றுப்போகவில்லை இன்னும்.
 

வாலிபம் போகும் 
வாசலுக்கு வந்தாச்சு 
வாடிக்கொண்டிருக்கிறது வாழ்வு.
 

முப்பத்தைஞ்சு வாயசு 
முடியப்போகுது 
முடிவாய் கேட்டுப்போட்டன்.


"தனிமை மிகக் கொடுமையம்மா, 

வேலை வேலையெண்டோடுறதில
சாப்பாடு கூடச் சரியில்லை.
 

ஆறுதலாய்ப்போச ஆளில்லை 
தெரிஞ்சவை என்னயிங்க 
மாப்பிள்ளை கேக்கினம்".
 

டையாய் நானும்
பேசிப் பார்த்தன் 
பத்திர காளியாயிற்றா அம்மா !
 

இப்ப என்னவுனக்கு வயசே போட்டுது ? 
சின்னவன் சொந்தக்காலாகட்டும், 
சின்னவளுக்கு மாப்பிள பாக்கோணும்,
 

நீ இப்பிடி 
தனிக்குடும்பமாயிட்டா 
கதியென்ன எங்கட.?

கடன்பட்டுன்ன 

கனவுக்கு அனுப்பினது 
உதுக்குத்தானோ ?
 
நேரகாலம் வந்தால் 

நல்ல பொம்பிளையாய் 
நானனுப்ப மாட்டனோ உனக்கு ?

முடிவாய் சொல்லிப்போட்டன் 

தம்பி தங்க பொறுப்பும் 
நீதான் முடிக்கவேணும்.


******


பத்து வருசம் 

இருபது வருசமாச்சு, 
இன்னும் இயந்திர வாழ்க்கைதான்.

ஊரில எல்லாரும்
உறவுகளோட 



சந்தோசமாய் வாழுயினம்.
 

நான் மட்டும் புரிந்துகொள்ளாத உறவுகளைப்போல் 
வாழ்க்கையைப் புரியாமலே 
வாழ்கிறேன்.
 
நாற்பதில் யார் தேடுவார்........? 

நைந்துபோன இதயமாய் இன்னும் 
நாட்களை எண்ணிக்கொண்டு வாழ்கிறேன்.
 

வெயில்போய் பனி வந்தாச்சு - ஒரே குளிர். 
மனசில் மட்டும் 
வெயில் மாறவில்லை !!! 
***